ஸ்ரீ குருப்யோ நம:
அனைவருக்கும் வணக்கம்,
பரம[தன்]னை அறிய ஆர்வமுடன் வருகின்ற பாமரர்களின் ஒரு ஆரம்ப பள்ளிக்கூடமாக இந்த “பராபரம் பாடசாலை” பயன்படுகின்றது. இந்த கல்விச்சேவை கடந்த 2017ஆம் ஆண்டு முதல் நடைமுறையில் உள்ளது.
இந்த பள்ளியில், படிக்கின்ற ஆன்மீக ஆர்வலர்களாகிய மாணவர்கள் பலரும் பல தேசங்களில், பல ஊர்களில், பல பகுதிகளில் இருப்பதினால், அவர்களால் அங்கிருந்து, இந்த ஊருக்கு வந்து நேரடி வகுப்பில் கலந்துக்கொள்வது என்பது இயலாத காரியமாக உள்ளது.
அதனால், அந்தந்த ஊர்களில் இருக்கும் மாணவர்களின் ஆர்வத்திற்கு ஏற்றவாறு, அவர்களது இல்லம் தேடி, இந்தப் பள்ளிக்கூடமே இணையதளம் வாயிலாக வகுப்புகளைக் கொண்டு சேர்க்கின்றது.
இந்த அத்யாத்ம யோகம் எனும் ஆன்மவியல் கல்விக்கான இணையதள வகுப்புகள் டெலிகிராம் சேனல் (Telegram App) மூலமாக, “பராபரம்” என்னும் குழுவில் தினந்தோறும் (Daily Online Classes) நடைப்பெறுகின்றன.
இந்த பராபரம் டெலிகிராம் குழுவில் இணைய லின்க் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
Paraparam Patasala Registration Form
ஆத்ம வித்யா எனும் அத்யாத்ம ஞானக் கல்வியைக் கற்றுக் கொடுக்கும் ஆசிரியரும், இதைக் கற்றுக் கொள்ள விரும்புகின்ற மாணவர்களும் இந்த உலகத்தில் எங்கிருந்தாலும், இவர்கள் இருவரையும் ஒன்றாக இணைக்கும் ஒரு பாலமாக, https://paraparam.in/ என்ற இந்த இணையதளம் உள்ளது.
இந்த இணையதளத்தில் இலவசமாக இணையக்கல்வி கொடுக்கப்படுவதால், இதனைப் பயன்படுத்தி, இன்றியமையாத மனித வாழ்க்கைக்கான மகத்தான ஆன்மவியல் பாடங்களைக் கற்றுக்கொள்ளும் ஒரு வாய்ப்பு அனைவருக்கும் உருவாகின்றது.
அதுவும் எளிய தமிழ் மொழியில் எல்லோருக்கும் எளிதாகப் புரியும் வகையில், இந்த ஆன்மவியல் பாடங்களைப் பயிற்றுவிக்கப்படுகின்றது.
இந்த இணையதளத்தில் போதிக்கப்படுகின்ற, பாடங்கள் அனைத்துமே, ஒருவர் தன் சுயத்தை உணரக்கூடிய உயரிய ஞானப் பொக்கிஷங்கள் என்பதினால், இந்த உயர் ஞான உபதேசங்கள் எல்லாமே, நமது பண்டைய ரிஷிகளின் உள்ளுணர்வு வெளிப்பாடுகள் என்பதை உணர்ந்துக் கொண்டு, அவர்கள் காட்டுகின்ற அருமையான பாதையில் நம்மையும் அழைத்துச் செல்லும்.
அவர்கள் நமக்குக் காட்டிக் கொடுக்கின்ற உயரிய பாதை என்பது, வேதத்தின் மகா வாக்கியமான ‘தத்வமஸி’ என்ற “அதுவே நீ” எனும், நம் சுய அறிவை நமக்குக் காட்டிக் கொடுக்கும் உபதேசங்களாகும்.
மற்றவர்களால் புறத்திலே ஏற்றி வைக்கப்பட்ட இருமைகளினால், நாம் நம் உண்மை சொருபத்தை இழந்து விட்டோம். ஆதலால், நமது மனம் உயர்வு – தாழ்வு, நல்லது – கெட்டது, பாவம் – புண்ணியம் என்ற இருமைகளில் சிக்கிக் கொண்டிருப்பதையும், ‘அனைத்தையும் அறிபவன் நான்’ என்ற மனதின் அகந்தையையும் நமக்கு சுட்டிக்காட்டி, அவ்வாறு அறியப்படுகின்ற அனைத்திற்கும் ஆதாரமாக அந்த தூய அறிவு ஒன்று மட்டுமே உள்ளது என்பதை எடுத்துரைக்கின்றார்கள்.
இங்கு படைக்கப்பட்ட அனைத்து வடிவங்களும் நம் சுய அறிவில் தானாகத் தோன்றுபவைகள் என்பதை நமக்கு அறிய வைத்து, அறிபவனாகிய மனதிற்கும், அறியப்படுகின்ற அனைத்து வடிவங்களுக்கும், ஆதாரமாக அந்த தூய உணர்வு ஒன்றே “அறிவு” எனும் நிலையில் எல்லாவற்றையும் அறிகின்றது.
அத்தகைய தூய அறிவாக நானே இருக்கின்றேன் என்றும், இங்கு படைக்கப்பட்டவைகள் எதுவும் என்னுடைய அறிவிற்கு வேறாக இல்லை என்றும், எல்லாமே என்னுடைய இருப்பினாலேயே இருக்கின்றது என்றும் எளிதாக எடுத்துப் புரியவைக்கின்றார்கள்.
அத்தகைய அந்த தூய அறிவாகிய தன்னுடைய சுய உணர்வை (ஆத்மாவை) அறியக்கூடிய மிக உயரிய ஆத்ம ஞான அறிவுரைகள் என்பதினால், இவைகளை இனி வருகின்ற இளைய தலைமுறைகளுக்கு எளிதாகக் கொண்டு சேர்க்க வேண்டும் என்ற உயரிய நோக்கத்திலும், அத்துடன் அவைகளையெல்லாம் மிகவும் பத்திரமாக ஒரு இடத்தில் பாதுகாத்து வைக்க வேண்டும் என்ற ஆர்வத்திலும், இந்த https://paraparam.in/ என்ற இணையதளம் உருவாக்கப்பட்டது.
ஆகவே, மனிதனைப் புனிதனாக மாற்றுகின்ற மிக உயரிய உபதேசப் பாடங்களைப் படிக்க விரும்பும் அன்பர்கள் இந்த இணையதளத்தை இலவசமாகப் பயன்படுத்தி பயனடைய வேண்டும்.
இதில் கொடுக்கப்பட்ட உயரிய வகுப்புகளில் கலந்துக் கொண்டு, தூய அறிவாகிய தன் சுய உணர்வை நாம் ஒவ்வொருவரும் நம்முடைய அனுபவத்தில் உணர்ந்து, உற்சாகத்துடன் வாழும்போதே “ஜீவன் முக்தி” என்ற நிலையை உணர வேண்டும்.
நன்றி!
என்றும் அன்புடன்,
ப்ரக்ஞன்.
